தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனம் முற்றுகையிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர், அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு விகே சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தை 10க்கும் மேற்பட்ட பெண்கள் வாகனத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கைகளில் ’அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என்ற பதாகைகளுடன் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.