தமிழ் நாடு

தேர்தல் மன்னன் பத்மராஜன் 253ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்!

Staff Writer

மேட்டூரில் போட்டியிட மனுமன்னன் பத்மராஜன் 253-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்காக, மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி, பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இவர் 1988ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.

இந்திய அளவில் தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார் இதனால் இவர் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய், நரேந்திர மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார்.

கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் மன்னன் பத்மராஜன் 253ஆவது முறையாக மேட்டூர் கோட்டாச்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலுருமான சுகுமாரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1991ஆம் ஆண்டு நரசிம்மராவை எதிர்த்து போட்டியிட்டபோது, என்னை கடத்தினார்கள். பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகி தப்பித்தேன். 1996ஆம் ஆண்டு தேர்தலின் போது 5 மாநிலங்களில் போட்டியிட்டேன். அப்போது, ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டி போட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. 254 வது முறையாக பெரம்பூர் தொகுதியில் விஜயை எதிர்த்து போட்டியிட உள்ளேன்.

2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேட்டூர் தொகுதியில் 6,700 ஓட்டுகள் வாங்கியது எனது அதிகபட்ச வாக்காகும். திருச்சியில் நடந்த இடைத் தேர்தலில் சரத்குமாரை விட அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளேன். இதுவரை தேர்தலுக்காக சுமார் ரூ.1 கோடிக்கு மேலாக செலவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.