முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

“இபிஎஸ் வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார்…!”

Staff Writer

“ஒருவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் ரூ. 15 லட்சம் தருவதாக வடை சுட்ட மாதிரி, பழனிசாமியும் இப்போது வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார். இந்த வடைகளையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நாகர்கோவிலில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் தாழ்த்தி வீழ்த்த பாஜக நினைக்கிறது. வளர்ச்சி அடையக்கூடிய மாநிலங்களில் பாஜக இருக்காது; பாஜக இருந்தால் வளர்ச்சி இருக்காது.

அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, இந்தியா முழுக்க கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து. மணிப்பூர் இன்றும் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.

அஸ்ஸாமில் இன்னும் மோசம். அம்மாநில முதலமைச்சர் தன் பொறுப்பு மற்றும் மாண்பை மறந்து, முஸ்லிம்கள் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்குகிறார். பீகாரில் பள்ளிகள் அருகே இறைச்சிக் கடைகள் இருந்தால், அகற்றுவோம் என்று மாநில துணை முதலமைச்சர் பேசுகிறார்.

இப்படியொரு நிலைமையை தமிழ்நாட்டில் கட்டமைக்கத்தான் பாஜகவினர் தவியாய்தவிக்கின்றனர். ஆனால், நமது திராவிட மாடல் அரசில் மத நல்லிணக்கமும் ஒற்றுமையும் பேணப்படுகிறது.

வக்ஃபு திருத்தச் சட்டம், சிஏஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்; பெரும்பான்மையினர் சகோதரத்துவத்துடன் இருக்கின்றனர். அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர்.

வரலாற்றிலேயே இல்லாத எண்ணிக்கையாக 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம்.

பாஜகவிடம் வெளிப்படையாகவே கேட்கிறேன். நீங்கள் எப்போதுதான் வன்முறையை விட்டுவிட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீர்கள்? எப்போது வெறுப்பையும் பிரிவினையையும் விதைப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கான நல்ல விஷயங்களை பேசுவீர்கள்?

தமிழ்நாட்டைக் குறைசொல்லிப் பேசுவதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? நீங்கள் ஆளக்கூடிய எந்த மாநிலம், தமிழ்நாட்டைவிட சிறப்பாக ஆளப்படுகிறது?

தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் எப்போது முடிவுக்கு வரும்?

இதைத் தீர்த்து வைப்பதாகத்தானே 12 ஆண்டுகளுக்குமுன் ஆட்சிக்கு வந்தீர்கள்? வெளியுறவுத் துறையும் கடற்படையும் யார் கட்டுப்பாட்டில் உள்ளது?

இவர்களுக்குக் கிடைத்த சரியான ஆள்தான் எடப்பாடி பழனிசாமி. ஒருவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் ரூ. 15 லட்சம் தருவதாக வடை சுட்ட மாதிரி, பழனிசாமியும் இப்போது வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார். இந்த வடைகளையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

பாஜக டப்பா என்ஜினை நம்பி அதிமுக இருக்கிறது; அதிமுக என்கிற மூழ்குகிற கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான்; ராஜ்ஜியம் கிடைக்காது" என்று தெரிவித்தார்.