வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விவகாரத்தில் எடப்பாடி சொல்வது பொய் என திமுக எம்பி என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி என்.ஆர். இளங்கோ இன்று (நவம்பர் 18) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டான, திமுகவின் பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் கணக்கீட்டுப் படிவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைக்கு புறம்பான செய்தி
பிஎல்ஏ2-க்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் மட்டுமே நியமிக்கப்பட முடியும். நியமனம் செய்யப்பட்ட பிஎல்ஏ2-க்களுடைய பட்டியலைத் தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையதளத்தில் வெளியிடும். இந்த பிஎல்ஏ2-க்கள் மட்டும்தான் பிஎல்ஓ-க்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய தகுதி பெற்றவர்கள்.
எஸ்ஐஆரை பொறுத்தவரை, ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுடைய பிஎல்ஏ2 ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டுப் படிவங்கள் வரை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது.
அதிமுகவினர், எஸ்ஐஆர்-ஐ வரவேற்றுப் பேசியது, அதில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே.
எஸ்ஐஆர் நிறைவேற்றத் தொடங்கிய பிறகே, பொதுமக்களுடைய வாக்குகளைப் பறிக்கக்கூடிய வகையில் இது இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து, தங்கள் கட்சி எடுத்த நிலை தவறு என்று அறிந்திருக்கிறார்கள். அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவரே, தன்னுடைய கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தருவதற்கு, திமுகவின் பிஎல்ஏ-க்கள் தான் உதவி செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தன்னுடைய இணையதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக ஏன் வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும் என்பதை இத்தனை நாட்களாக சொல்லவில்லை, அவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்து கொண்டே இருக்க வேண்டுமா? என்று கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
கலைஞர் 2004ஆம் ஆண்டே, வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும் என்று தன் கைப்பட கடிதம் எழுதி இருக்கிறார். 2004 முதல் 2024 வரை, ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திமுகவின் அமைப்புச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி நூற்றுக்கும் மேலான கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், தகுதியற்ற யாரும் வாக்காளராகக் கூடாது, தகுதியுள்ள யாரும் நீக்கப்படக் கூடாது, இறந்தவர்கள், இரட்டைப் பதிவு உள்ளவர்கள், குடிமாறியவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை திமுக 2004 ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத போது, திமுக நீதிமன்றத்தில் தயங்காமல் பல வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுக்கள், ஈவிஎம் இயந்திரம் தொடங்கி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகள் வரை, ஒரு தேர்தலை ஜனநாயகமாக நடத்துவது குறித்து மக்கள் பக்கம் நின்று குரல் எழுப்பக்கூடிய கட்சியாக திமுக மட்டுமே இருப்பதாகக் காட்டுகிறது.
தற்போது முறையற்ற வகையில் செய்யக்கூடிய இந்த எஸ்ஐஆர்-ஐ தான் திமுக எதிர்க்கிறது. இது களத்தில் பிராக்டிக்கலாக செய்ய வேண்டிய ஒரு வேலை, ஆனால் தேர்தல் ஆணையம் போதுமான தயாரிப்பு வேலைகளைச் செய்யத் தவறிவிட்டது. தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது. முழுக்க முழுக்க பிஎல்ஓக்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. பிஎல்ஓக்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை; இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது. இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து.” என்றவர் தேர்தல் ஆணையரை தாங்களே தேர்ந்தெடுக்க பாஜக எப்படி சட்டவிதிகளை மாற்றியது என்பதை சுட்டிக்காட்டி பேசினார்.
”திமுகழகம் எப்போதும் ஒரு முழுமையான, நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடி எந்தவொரு தனி மனிதரின் வாக்கும் பறி போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.