எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

செவிலியர்கள் மீது ’பாசிசம் பாயாச’ விஜய் போலீசின் அக்கிரமம் - எடப்பாடி பழனிசாமி

Staff Writer

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது இன்றைய த.வெ.க. அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று காலையில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"'பாசிசம், பாயாசம்' என்று வசனங்கள் பேசிய முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை எப்படி முதல்வர் நியாயப்படுத்துவார்?

ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா?

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்னையைச் சுட்டிக்காட்டினால்கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராக இருக்கிறார் இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர்.

தனது துறையைச் சார்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து ஒரு வார்த்தை பேசினாரா? செவிலியர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதைவிட அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது இந்த அமைச்சருக்கு?

போராடும் இடத்தில் மின்சாரத்தைத் துண்டிப்பது, பேச்சுவார்தை எனக் கூறி அழைத்துச் சென்று கைதுசெய்வது என மிகவும் கீழ்த்தரமாக ஒரு போராட்டத்தை அணுகியுள்ள இன்றைய ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயகரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram