பொன்முடி 
தமிழ் நாடு

பல்கலை. வேந்தர் பதவி- அமைச்சர் விஸ்வநாதனுக்கு பொன்முடி கண்டனம்!

Staff Writer

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பா.ஜ.க.வுக்கு ஒத்தூதுகிறார் என்று தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

”தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உட்பட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு.விஸ்வநாதன் “ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.” என்று அறிக்கை ஒன்றில் பொன்முடி கூறியுள்ளார்.   

” ’ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம்‘ என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.” என்று பொன்முடியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.