மாணவர்களின் கல்விக் கடன் பெற்றுத்தருவதற்காக மாவட்ட அளவில் அதிகாரி ஒருவர் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதலமைச்சர் தலைமையில் 06.07.2026 அன்று நடைபெற்ற உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கையினை மேலும் அதிகரிப்பதற்கும், பொருளாதார காரணங்களால் எந்தவொரு மாணவரும் உயர்கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படாத வகையில், தகுதியான மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கல்விக்கடன் வழங்குவதைத் திறம்படச் செயல்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவிப் பேராசிரியர் நிலையில் ஒருங்கிணைப்பு அலுவலர் (Facilitation Officer) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சேவைக்கென ஒவ்வொரு ஒருங்கினைப்பு அலுவலருக்கும் பிரத்தியேகமான அலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணாக்கர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் வழங்குவார்கள்.
ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி, முன்னணி வங்கிகளின் உயர் அலுவலர்கள் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கடன் பெற விரும்பும் மாணாக்கர்கள் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களைத் தொடர்புகொண்டால் கல்விக் கடன் குறித்த அனைத்து விவரங்களையும் மாணவர்களுக்கு வழங்குவதோடு, மாவட்ட முன்னணி வங்கி மேலாளரையும் (District Lead Bank manager) தொடர்புகொண்டு மாணாக்கர்களுக்கும், வங்கிக்கும் ஒரு இணைப்பு பாலமாக ஒருங்கிணைப்பு அலுவலர்கள் செயல்படுவர்.
மேலும், ஏற்கெனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டல் மற்றும் உதவி மையமாக செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பொறுப்பு அலுவலர் (Nodal Officer) அவர்களுடன் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர் இணைந்து செயல்படுவார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர் வாயிலாக பெறப்படுகின்ற கல்வி கடன் குறித்த தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும்,
மாவட்ட ஆட்சித் தலைவர், அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (District Co-ordinators) மற்றும் கல்விக் கடன் ஒருங்கிணைப்பாளர்கள் (Faclilitation Officers), பொறுப்பு அலுவலர்களுடன் (Nodal Officer) அவ்வப்போது ஆய்வுக் கூட்டம் நடத்தி வங்கிவாரியாக மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் எளிதாகவும், விரைவாகவும் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்.
மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தில் கல்லூரி வாரியாகவும் வங்கிகள் வாரியாகவும் கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை, வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களின் விவரம், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் மீது உடனடியாக கல்விக்கடன் வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொள்வார்.” என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.