காவிரி விவசாயிகள் 
தமிழ் நாடு

பயிர்க்கடன், பால் விலை... அறிவிப்புகள் இல்லையே?- விவசாயிகள் ஆதங்கம்

Staff Writer

விவசாயிகள் எதிர்பார்த்த பல அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதங்கம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமிநடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
தமிழக சட்டமன்றத்தில் 2026-27க்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையும், அதனை தொடர்ந்து இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையும் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற இந்த 5 ஆண்டு காலத்தில், தமிழகத்தில் வேளாண்துறைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கையை கடந்த ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக தாக்கல் செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

அதே நேரத்தில், ”தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி சம்மந்தமாக நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என்று விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், அதுகுறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.  

”தமிழக முதல்வரும், தமிழ்நாடு அரசாங்கமும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரிவினருக்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட மகளிர் உரிமைத்தொகையை மூன்று மாதத்திற்கு ஒன்றாக சேர்த்தும், கோடைக்கால சிறப்பு நிவாரணமாக ரூ.2000 என ரூ.5000 அறிவித்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஒன்றிய அரசாங்கத்தின் வேளாண் விரோத கொள்கையின் காரணமாக குறைந்தபட்ச ஆதாரவிலையும் ஒன்றிய அரசு அறிவிக்காததால், தமிழகத்தில் உள்ள விவசாயிகளும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தால் ஓரளவிற்கு நிம்மதி பெருமூச்சிவிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. 

எனவே, முதலமைச்சர் தமிழ்நாட்டில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன் முழுவதை தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட வேண்டுமொன்றும், மேலும் கரும்புக்கான விலை டன்னுக்கு ரூ.4000மும், பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான கொள்முதல் விலையை உயர்த்தியும் அறிவிக்க வேண்டும். ”என்று சாமி நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.