விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் திட்டங்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போதைய கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருந்த செல்வராஜ் உள்ளிட்ட 22 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் ஓஎன்ஜிசி எண்ணெய் தளவாடங்களை சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
எனவே பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக விக்கிரபாண்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் இறந்துவிட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் இல்லை என்று கூறி 18 பேர் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் ஏ1 ஆக சேர்க்கப்பட்ட பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவருக்கு 13,000 ரூபாய் அபராதம் விதித்தும், 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி சரத்ராஜ் நேற்று (டிசம்பர் 7) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரஜன் திட்டங்களை எதிர்த்தும், நெல் கொள்முதல் விலை உயர்வு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவசாய பிரச்சனைகளுக்கு தமிழக முழுவதும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தவர் பி.ஆர் பாண்டியன்.
இந்த சூழலில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது விவசாய சங்கங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.