ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக பெற்ற தந்தையை பாம்பை ஏவி கொலை செய்த 2 மகன்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் இ.பி. கணேசன் (56). தமது வீட்டில் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி கணேசன் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் பாம்பு கடியால் நிகழ்ந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கணேசனின் பெயரில் ரூ.3 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் பணத்துக்கு மகன்கள் போட்டி போட்டு உரிமை கோரிய போது சந்தேகம் ஏற்பட்டதால் அந்நிறுவனங்கள் போலீசில் புகார் கொடுத்தன.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கணேசனின் மகன்களான மோகன்ராஜ் (26) மற்றும் ஹரிஹரன் (27) ஆகியோர் பெற்ற தந்தையை பாம்பை ஏவிவிட்டு கொலை செய்த கொடூரமும் வெளிச்சத்துக்கு வந்தது. பாம்பு கடித்த பிறகு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கணேசனை துடி துடிக்க மகன்கள் சாகவிட்டுள்ளனர்.
இதனையடுத்து மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோருடன் கூட்டாளிகள் பாலாஜி (28), பிரசாந்த் (35), தினகரன் (28), நவீன்குமார் (28) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கணேசன் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில், 2.50 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளார். குடும்பம் கடனில் சிக்கியுள்ளது. இதனால், தந்தையை கொலை செய்து, அதை இயற்கை மரணமாக நம்ப வைத்து, காப்பீட்டு தொகையை பெற்று, கடன்களை அடைக்க மகன்கள் திட்டமிட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன், தந்தை கணேசனை நல்ல பாம்பை வைத்து கடிக்க வைத்துள்ளனர். அதில், அவர் இறக்கவில்லை. இதையடுத்து, அதைவிட கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க வைக்க முடிவு செய்தனர்.
இதற்காக, அரக்கோணம் அடுத்த மணவூரைச் சேர்ந்த பாலாஜி, 28, பிரசாந்த், 35, திருத்தணி தினகரன், 45, நவீன்குமார், 28, ஆகியோர் உதவியுடன், கட்டுவிரியன் பாம்பை கடந்த அக். 21இல் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
கணேசன் துாங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்துள்ளனர்.
ஆனால், குளியலறையில் பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடி, அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.
இன்சூரன்ஸ் விதிகள் சொல்வது என்ன?
பொதுவாக இன்சூரன்ஸ்- காப்பீடு என்பது விபத்து அல்லது இயற்கை மரணங்களுக்காக வழங்கப்படுகிறது. இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டு 1 ஆண்டுக்குள் தற்கொலை செய்தாலோ அல்லது பாலிசிதாரரை கொலை செய்துவிட்டு பணத்துக்கு உரிமை கோரினாலோ மோசடிகளில் ஒன்றாகும்.
இன்சூரன்ஸ் விதிகளின்படி, பாலிசிதாரரின் மரணத்தில் சந்தேகம் இருந்தாலோ அல்லது பாலிசிதாரரின் பணத்தைப் பெறுபவருக்கு கொலையில் தொடர்பு இருந்தாலோ அந்தப் பாலிசி செல்லாததாகும் என்பது குறிப்பிடத்தக்கது.