திண்டுக்கல் நகரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு இந்தத் துயர நிகழ்வு அரங்கேறியது.
திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் நேற்று இரவு வழக்கம்போல மின்தூக்கியில் நோயாளிகளும் உறவினர்களும் சென்றுவந்தபடி இருந்தனர். 9.30 மணியளவில் மின்தூக்கியில் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்துக்கொண்டது.
உடனே உள்ளே இருந்தவர்கள் அலறி சத்தமிட்டு உதவிக்குரல் எழுப்பினர். ஆனால் தீயிலிருந்து அவர்களால் தப்பமுடியவில்லை.
தீக்காயத்தால் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை உட்பட 6 பேர் நேற்று இரவே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து வேடசந்தூர் சட்டமன்றத்தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் எலும்புமூட்டு மருத்துவருமான வி.பி.பி. பரமசிவம், அ.தி.மு.க. மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கும் அரசு மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களைப் பார்த்தனர். அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
மூத்த அமைச்சர் இ. பெரியசாமியும் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.