“தமிழகமெங்கும் பரவி வரும் காய்ச்சல் குறித்து கள ஆய்வு செய்து, அதனை போர்க்கால அடிப்படையில் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகமெங்கும் பச்சிளங்குழந்தை முதல் முதியவர்கள் வரை கடும் காய்ச்சல், இருமல், சளி, உடம்பு வலி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அலைமோதி வருகின்றனர். மருத்துவமனைகளில் மட்டுமின்றி மருந்தகங்களில் கூட மக்கள் கூட்டம், கூட்டமாய் நிற்பதை பார்க்க முடிகிறது. இது ஏதோ இரண்டு, மூன்று நாட்கள் வந்துபோகிற காய்ச்சலாக அல்லாமல் 8 முதல் 10 நாட்களுக்கும் மேலாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைக்கிறது.
ட்வீட் போடுகிற இந்த நிமிடம் வரை அரசு இதுகுறித்து தெளிவான கள ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வராதது மிகுந்த கவலையளிக்கிறது. யூடியூப் மற்றும் மீம் கிரியேட்டர்கள் ‘Fever Paavangal’ வீடியோக்கள் வெளியிடும் அளவுக்கு தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் உச்சத்தில் ட்ரெண்டாக இருக்கிறது.
பருவமழை தொடங்கி இருக்கின்ற இச்சூழலில் இனியாவது அரசு விழித்துக்கொண்டு, வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து பரவி வரும் காய்ச்சல் குறித்து கள ஆய்வு செய்து, அதனை போர்க்கால அடிப்படையில் தடுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.