“மகாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றுவதால் என்ன.?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ”வேலைவாய்ப்பு தான் முக்கியமே தவிரப் பெயர் முக்கியமில்லை” என்றும் கூறியுள்ளார்.
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாகப் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை கிடைக்கும். அதை நீக்கிவிட்டு விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் - கிராமப்புறம்' என்று திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதைச் சுருக்கமாக விபி-ஜி ராம்ஜி என்று அழைக்கிறார்கள்.
மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்தப் பெயர் மாற்றத்தைக் கண்டித்துள்ளன. மேலும், மகாத்மா காந்தி திட்டத்தில் முழுச் செலவும் மத்திய அரசுக்கு இருக்கும். ஆனால், புதிய திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும் நிலையில், அதையும் பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் எதிர்த்தன.
இதற்கிடையே விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், "100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்த போகிறார்கள்.. நிறுத்திவிட்டார்கள். பெயரை மாற்றிவிட்டார்கள் எனச் சொல்லி வருகிறார்கள். என்ன பெயர் இருந்தால் என்ன? ராமர் பெயர் இருப்பதால் எங்களுக்கு என்ன? எங்களுக்கு ஒருவேளை சோறு கிடைத்தால் போதும். நீங்கள் காந்தி பெயரை வைத்துக் கொள்ளுங்கள். ராமர் பெயரை வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு அதன் பெயர் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தான். பெயரில் என்ன இருக்கிறது.
காந்தி மீது திடீரெனப் பாசம் வந்துவிட்டது போலப் பேசி வருகிறார்கள். காந்தி மீது ரொம்ப பாசமா உங்களுக்கு? இந்திரா காந்தியை கல்லால் அடித்தார்கள். எங்களுக்கு எந்தப் பெயர் இருந்தாலும் பிரச்சினை இல்லை.. வேலைவாய்ப்பு இருந்தால் போதும்.! 150 நாள் கொடுத்தாலும் ஓகே தான்.. 100 நாள் கொடுத்தாலும் ஓகே தான்" என்று அவர் பேசியுள்ளார்.