முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  
தமிழ் நாடு

“மோசடியான திட்டத்துக்கு காந்தி பெயர் வேண்டாம்…!”

Staff Writer

வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டத்துக்கு காந்தியின் பெயர் வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (டிசம்பர் 21) செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது: “மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி கொல்லப்பட்டார். ஏறத்தாழ 77 ஆண்டுகள் கழித்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி கொடிய செயலை செய்திருக்கிறது மத்திய பாஜக அரசு. இரண்டாவது முறையாக மகாத்மா காந்தியை கொலை செய்திருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திலிருந்து காந்தியின் பெயரை நீக்கியதோடு, வாயில் நுழையாதை பெயரை இப்போது வைத்துள்ளனர். இந்தி சொற்களை ஆங்கில எழுத்தில் எழுதியிருக்கிறார்கள். இது இந்தியும் இல்லை, ஆங்கிலமும் இல்லை. அமைச்சர்களுக்கே புதிய பெயர் புரியவில்லை. இதனை கடுமையாக எதிர்க்கிறோம்.

காங்கிரஸின் 100 நாள் வேலைத்திட்டம் என்பது நாடு முழுவதும் நடைமுறையில் இருந்தது. யார் வேண்டுமானாலும் வேலைக்குப் பதிவு செய்யலாம். வேலை உறுதி இருந்தது. ஆனால், இப்போது கொண்டு வந்துள்ள 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' (VB-G RAM G) திட்டம் மத்திய அரசு சொல்கிற மாவட்டங்களில் அல்லது பகுதிகளில் மட்டும் தான் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு ஒரு தொகையை ஒதுக்கும் அதற்கு மேல் செலவாகினால் அதற்கு மாநில அரசு தான் பொறுப்பு. மத்திய அரசு முழுத்தொகையை கொடுக்காது.

குறிப்பிட்ட பகுதிக்கு வேலை கிடையாது என சொல்லிவிட்டால், மக்கள் வேலை கேட்க முடியாது. இந்த புது சடத்தின் விபரீதம் என்னவென்றால், மாநில அரசின் நிதி ஆதாரத்தைப் பொருத்துதான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். இதுபோன்ற பலகுறைபாடுகள் இந்த திட்டத்தில் உள்ளன. இந்த மாதிரியான மோசடியான திட்டத்துக்கு காந்தி பெயரை வைக்க நாங்கள் விரும்பவில்லை. விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' மக்களுக்கு பயனில்லாத சட்டம்” என்றார்.

மேலும், ”தமிழகத்தில் 66 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களை நீக்கியதை நாங்கள் விமர்சிக்கவில்லை. இதை ஏன் இத்தனை ஆண்டுகாலம் செய்யாமல் இருந்தார்கள்?

இறந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. இவர்களைத் தவிர 66 லட்சம் பேரை முகவரி இல்லாதவர்கள் என நீக்கி உள்ளனர்.” என்றார்.