சாலையில் வீசப்பட்ட மாலை சிக்கியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியானார்.  
தமிழ் நாடு

சாலையில் வீசப்பட்ட மாலை சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி!

Staff Writer

இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் வீசப்பட்ட மாலை இருசக்கர வாகனத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் சுரேஷ் வாசுதேவன், வயது 30. இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இறுதி ஊர்வலத்தில் வீசப்பட்ட மாலை ஒன்று இவரின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த அவருடைய இருசக்கர வாகனம், அரிக்கம்பேடு எரிவாயு நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

இதனால், பலத்த காயமடைந்த அவரை, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆவடி போக்குவரத்துப் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, சென்னை அயனாவரம், பெரம்பூர் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள லோகோ ஒர்க்ஸ் சாலையில், இருசக்கர வாகனம் ஆட்டோவுடன் மோதியதில் பெரம்பூரைச் சேர்ந்த கிஷோர்குமார் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விசாரித்து வரும் போலீசார், தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன் என்பவர், அவருடன் பணிபுரியும் சந்தோஷ் உடன் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு முன்னால் சென்ற குப்பை ஏற்றிச் சென்ற லாரி திடீரென இடப்புறம் திரும்பியதில், இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் லாரியில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்னாவிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram