சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ் நாடு

கோகுல்ராஜ் கொலைவழக்கு: சாகும்வரை சிறை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Staff Writer

வேறு சாதியைச் சார்ந்த பெண்ணைக் காதலித்ததற்காக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் கோகுல்ராஜ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  கொலை குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை உறுதி செய்ததோடு முதன்மை குற்றவாளியான யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் சாகும்வரை சிறையில் இருக்கவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 2015 ஆம் ஆண்டு நடந்தது. நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தாா் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் என்பவர்.. காதல் விவகாரத்தில் நடந்த ஆணவக்கொலை என இது கூறப்பட்டு  காவல்துறையினர் விசாரித்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சங்ககிரியை சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது குழுவினர் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தொடக்கத்தில் நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த கொலை வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.  கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளதாகக் கூறிய அவர்கள் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்றும் யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.