மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னையிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு குமரி மாவட்டம், மார்த்தாண்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வண்டிநகரம் பகுதியில் உள்ள நான்குவழிச்சாலையில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், சாலையில் உள்ள தடுப்பில் மோதிய தனியார் ஆம்னி பேருந்து, எதிரில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் தனியார் ஆம்னி பேருந்து சாலையோரம் இருந்த வஞ்சிநகரம் பயணிகள் நிழற்குடையில் மோதி ஆம்னி பேருந்து சேதமடைந்தது. மேலும், விபத்தில் சிக்கிய அரசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 42 பேர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.