டயர்கள் பற்றாக்குறையால் அரசு பேருந்துகள் முடக்கம் 
தமிழ் நாடு

8 மாதங்களாக டயர்கள் பற்றாக்குறை... அரசுப் பேருந்துகள் முடக்கம்!

Staff Writer

டயர்கள் பற்றாக்குறையால் அரசுப் பேருந்துகள் முடங்கியுள்ளதாகவும், உடனடியாக புதிய டயர்களை வாங்கி விபத்தின்றி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாட்டிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த இரு மாதங்களாக டயர்கள் வாங்கப்படாததால், 1500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன; அதுமட்டுமின்றி, பழுதான டயர்களுடன் இயக்கப்படும் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் என மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மொத்தம் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு சொந்தமான 317 பணிமனைகளிலிருந்து  21,198 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுவந்த விடியல் பயணத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, வெற்றிப் பயணத் திட்டமாக மாற்றப்பட்டதால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடு செய்யப்படாததால், ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக பேருந்துகளுக்கு உதிரிபாகங்கள் வாங்கப்படாததன் காரணமாக பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்பட்டிருந்தது. அதுவே சரி செய்யப்படாத நிலையில் தான் டயர்கள் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பணிமனையிலும் 5 முதல் 10 பேருந்துகள் வீதம் மாநிலம் முழுவதும் 1500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்பகுதிகளுக்கு 2 அல்லது 3 பேருந்துகள் சென்று வந்தால், அதில் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழக அரசால் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே, கிராமப்புற பெண்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று வாழ்வாதாரம் ஈட்ட வேண்டும் என்பதுதான். அரசுப் பேருந்துகள் முடங்கிக் கிடப்பதால் தமிழக அரசின் நோக்கமே பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு புறம், பழுதடைந்த டயர்களைக் கொண்டு இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பஞ்சர் ஆகுதல், டயர் வெடித்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதல் என பல வகையான விபத்துகளுக்கு உள்ளாகின்றன. டயர்கள் கொள்முதலுக்கான புதிய டெண்டர்கள் கடந்த 8 மாதங்களாக கோரப்படாததும், அதனால் புதிய டயர்களை வழங்க டயர் தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்து விட்டதும் தான் இந்த சிக்கலுக்கு காரணமாகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு டயர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோரப்பட்டன. அதில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் டயர் வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியாகி விட்டது. அதன் பிறகும் செப்டம்பர் வரை 6 மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்ட விலையில் டயர்களை வழங்கிய நிறுவனங்கள், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து விட்டதாகக் கூறி, கடந்த இரு மாதங்களாக டயர்களை வழங்க மறுத்து விட்டன.

டயர்கள் கொள்முதலுக்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாததற்கு காரணம், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடி தான்.

அரசுப் பேருந்துகள்தான் கிராமப்புறங்களின் மனித வளத்தையும், கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருள்கள் உட்பட்ட அனைத்துப் பொருள்களையும் நகரங்களுக்கு கொண்டு சென்று, வருவாய் ஈட்ட  உதவுகிறது.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்கவும், அதைக் கொண்டு உடனடியாக டயர்களை கொள்முதல் செய்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசுப் பேருந்துகளை விபத்தின்றி இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram