அரசு கலைக் கல்லூரிகள் 
தமிழ் நாடு

125 கல்லூரி முதல்வர் பணியிடங்களை எப்போதுதான் நிரப்புவீர்கள்? - அன்புமணி

Staff Writer

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 125 முதல்வர் பணியிடங்களையும், 9000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

"கடந்த 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 125 முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்துக் கேட்டபோது, முதல்வர் பதவி காலியாக இருக்கும் இடங்களுக்கு பொறுப்பு முதல்வர்கள் நியமிக்கப்பட்டு நிர்வாகப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அரசு கலை - அறிவியல் கல்லூரியின் நிரந்தர முதல்வராக இருப்பவர் மேற்கொள்ளக் கூடிய நிர்வாகப் பணிகளையும், அவர் எடுக்கும் முடிவுகளையும் பொறுப்பு முதல்வரால் எடுக்க முடியாது. இதனால் கல்லூரியின் செயல்பாடுகளும், வளர்ச்சியும் கண்டிப்பாக பாதிக்கப்படும்.

மேலும், பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படும் மூத்த இணைப் பேராசிரியருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.  இதனால் ஆண்டுக்கு  ரூ.6 கோடி வரை அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். 

ஏராளமான அரசுக் கல்லூரிகளுக்கு  சொந்தக் கட்டடங்கள் இல்லாத நிலையில், ஆண்டுக்கு ரூ.6 கோடி இவ்வாறு அரசால் வீணடிக்கப்படுகிறது.

பணி மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படும் கல்லூரி முதல்வர்களுக்கான மூப்புப் பட்டியல் தயாராக உள்ள நிலையில், அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும்.  

இதைப்போல, கடந்த 12 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் பணிகூட நியமிக்கப்படாத நிலையில், 9000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கடந்த ஆட்சியில் 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டும், அதில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக உதவிப் பேராசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவில்லை." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram