பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 
தமிழ் நாடு

பத்து கோ ஆப்டெக்ஸ் விற்பனையகங்களுக்கு மூடுவிழாவா?

Staff Writer

கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

த.வெ.க. அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வெற்றித் தறி ஷோரூம்கள் என்ற பெயரில் புதிய விற்பனையகங்களை திறக்கப் போவதாகக் கூறியதாகவும், தற்போது இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது த.வெ.க.வின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் சமூகஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:

"தமிழ்நாட்டில் கடலூர், சேலம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலும், ஆந்திரம், மராட்டியம் உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்காகவும் உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.

விற்பனையிலும், வருவாயிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆள்குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவை ஆகும்.

தனியார் நிறுவனங்களின் நலனுக்காக கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவு தான் இன்றைய அவலம் ஆகும்.

கடந்த 2025-16ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 133, வெளிமாநிலங்கள், வளைகுடா நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் 67 என மொத்தம் 200 விற்பனையகங்களுடன் கோ-ஆப்டெக்ஸ் செயல்பட்டு வந்தது. அதன்பின் கடந்த 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக குறைந்து விட்டது.

இதே நிலை நீடித்தால் 2035-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூடுவிழா நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தைக் காக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram