அறிவித்த குறுவைத் தொகுப்பை வழங்க வேண்டும் 
தமிழ் நாடு

குறுவைத் தொகுப்பு என்னாச்சு?-அன்புமணி, டி.டி.வி.தினகரன் கேள்வி

Staff Writer

தமிழக அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பை, உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று அன்புமணி, டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து:

"தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.4000 கிடைக்கும் வகையில் குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, 70 நாள்களாகியும் இன்று வரை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மிகவும் நெருக்கடியான காலத்தில் உழவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறுவைத் தொகுப்பை வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

குறுவை சாகுபடி தொகுப்பு என்பதே நெற்பயிர்களை நடவு செய்யும் காலத்திலும், அதைத் தொடர்ந்து வரும் சில நாள்களிலும் வழங்கப்பட வேண்டியதாகும்.

இன்னும் 10 நாள்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், இன்று வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

உழவர்களுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:

"சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்?

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள டெல்டா, டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 134 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் விஜய்யால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பு இன்று வரை வந்துசேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறுவை சாகுபடி, அதனையொட்டி நடைபெறும் பணிகளுக்காக வழங்க வேண்டிய குறுவைத் தொகுப்பு, குறுவை சாகுபடியே முடிவடைந்து அறுவடை செய்யும் தருவாயிலும் வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் த.வெ.க. அரசின் அலட்சியப் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

குறுவைத் தொகுப்பை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவது, விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு உடனடியாக விவசாயிகளைச் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்." என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram