சட்டப்பேரவையிலிருந்து வெளியேறும் ஆளுநர் ஆர். என். ரவி 
தமிழ் நாடு

4ஆவது ஆண்டாக வெளியேறிய ஆளுநர் ரவி!

Staff Writer

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்துள்ளார்.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை ஆளுநர் ஆர்.என். ரவி வருகைதந்தார்.

முதலில் தமிழ்த் தாய் பாடல் இசைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சிறிது நேரம் ஆளுநர் காத்திருந்த நிலையில், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து உரையைப் படிக்க மறுத்த ஆளுநர், நான் தொடர்ச்சியாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறியும் அதைப் பின்பற்றாததில் வருத்தம் இருப்பதாக தெரிவித்துவிட்டு, பேரவையைவிட்டு வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை மரபுப்படி, ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதே வழக்கம் என்று அப்பாவு தெரிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர் அரசியலமைப்பை ஆளுநர் தொடர்ந்து மீறுவதாக தெரிவித்த முதல்வர், ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறையை மாற்ற பிற மாநில அரசியல் கட்சிகளுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.

தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவர் படித்ததாக அவைக் குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானத்தை முதல்வர் கொண்டுவந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியதாக அப்பாவு அறிவித்தார்.

2023, 2024, 2025 ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஆளுநரின் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியுள்ளார்.