அன்புமணி 
தமிழ் நாடு

அன்புமணி குடும்பம் நாடகமாடுகிறது - இராமதாஸ் பேரன் முதல் கண்டனம்

Staff Writer

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் பேரன் முகுந்தன், அவரின் தாய்மாமா அன்புமணி, அவரின் மனைவி சௌமியா ஆகியோர் மீது பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து முகுந்தன் பேசியிருப்பதாவது:-

” இதற்கு முன் நான் எங்கும் பேசியதில்லை. இப்போது முதல்முறையாக உங்கள் முன்னால் பேசுகிறேன்.

அன்புமணியும் செளமியாவும் அய்யாவைத் தனிமைப்படுத்தி அதில் அரசியல் இலாபம் தேடப் பார்த்தனர். அதை தடுப்பதற்காகவே நானும் என் அம்மாவும் அய்யாவுடன் இருக்கிறோம். எங்களுக்கு எந்த பதவி ஆசையும் கிடையாது. நான் எந்த ஆதாயத்திற்காகவும் இங்கு இருக்கவில்லை. அன்புமணிதான் இந்த கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆதாயத்தைத் தேட முயல்கிறார்.

அன்புமணிக்காக அய்யா நிறைய செய்திருக்கிறார். தன் கட்சிக்குள் குடும்ப உறுப்பினர் யாரும் பதவிக்கு வர மாட்டார்கள் என்று அய்யா அவர்களின் வாக்குறுதியை அன்புமணிக்காகத் தளர்த்திக் கொண்டார். அன்புமணி மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்து நம்பிக்கை வைத்ததால்தான் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். கட்சியின் மேல்மட்ட பொறுப்புகள் வழங்கினார்.

அன்புமணி இருந்த வரை கட்சிக்குள் எந்த பிரச்சனையும் எழவில்லை. ஆனால், கட்சிக்குள் செளமியாவின் வருகைக்குப் பிறகு தான் இங்கு பிரச்சனை வெடித்தது. அன்புமணி தன்னுடைய மனைவி செளமியாவை கட்சியின் எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்தியது. 2 முறை எம்.பி சீட் கிடைத்தும் கூட ஒழுங்காக பாராளுமன்றத்திற்கு செல்லாததும் தான் அய்யாவுக்குப் பிடிக்கவில்லை

அன்புமணிக்கும் சௌமியாவிற்கும் இருக்கும் பண ஆசை மற்றும் பதவி ஆசையே குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிளவுகளுக்கும் காரணம். கௌரவத் தலைவர் ஜி.கே. மணி அவர்கள் மீது வீண் பழி சுமத்திவிட்டு, தங்கள் சுயநலத்திற்காக ஐயாவை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் குழந்தையை வைத்துக்கொண்டு மக்கள் முன் அன்புமணி குடும்பத்தினர் நாடகமாடுகின்றனர்.

மக்கள் முன்னிலையில் அழுவதும், நடிப்பதும் ஓட்டுக்காக மட்டுமே. பரப்புரைக்குக் குழந்தையைக் கூட்டிச் செல்லும் இவர்களால், தைலாவரம் தோட்டத்திற்கு ஐயாவைப் பார்க்க ஏன் குழந்தையை அழைத்துச் செல்ல முடியவில்லை? ஐயாவை இவர்கள் வெறும் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இங்கு வரவேண்டாம் என்று யாராவது யாராவது தடுத்தோமா? ஒரு பெற்ற மகன் தன் தந்தையை சந்திக்க வரும்போது யார் தடுக்க முடியும். தவறான தகவல்களை பரப்புகிறார் அன்புமணி.

2019 முதல் 2024 வரை நடந்த உண்மைச் சம்பவங்களை விவாதிக்க நான் தயார். ஒருமுறை பிஜேபிக்கு அஞ்சி, என் தாயாரின் காலில் விழுந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று அன்புமணி கெஞ்சியதற்கு நான் சாட்சி. என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அன்புமணி குடும்பத்தினர் தைரியம் இருந்தால் என்னுடன் உண்மை கண்டறியும் சோதனைக்கு வரட்டும்

மக்களைச் சந்திப்பதில்தான் ஐயாவிற்கு மகிழ்ச்சி. ஆனால், அவரைத் தனிமைப்படுத்தி, யாருடனும் பேசவிடாமல் தடுப்பது அன்புமணியின் ஆட்கள்தான். ஐயாவின் முகம் வேண்டும், ஐயாவின் பெயர் வேண்டும், ஆனால் அவர்களுக்கு ஐயா உயிருடன் இருப்பது தேவையில்லை என்ற நிலையில்தான் அவர்கள் செயல்படுகிறார்கள்.

மருத்துவர் ஐயா அவர்களின் விருப்பப்படி கட்சி நடந்திருந்தால், பாமக இன்று ஆட்சியில் இருந்திருக்கும். ஆனால், தன் பிள்ளைக்காக ஐயா செய்த சமரசங்களால்தான் பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனது அங்கீகாரத்தையே இழந்து நிற்கிறது.

யாரை வேண்டுமானாலும் நம்புங்கள், ஆனால் அன்புமணி மற்றும் செளமியாவை மட்டும் நம்பாதீர்கள்.” என முகுந்தன் கூறியுள்ளார்.