உச்சநீதிமன்றம் 
தமிழ் நாடு

“இலவசங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது!” – உச்சநீதிமன்றம்

Staff Writer

தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜோய்மால்யா பக்ஷி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கும் இலவசங்களை வழங்கும் மாநிலங்களுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசின் சலுகைகளை பெறத் தகுதியானவர்கள் மட்டுமின்றி அனைத்து தனி நபர்களும் பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. தேர்தலுக்கு முன்னதாக திடீரென நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நேரடி பணப் பரிமாற்றத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் மக்கள் இனி வேலை செய்வார்களா?

100 யூனிட் மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? இலவசங்கள் அறிவிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யும். அதிக கடன் மற்றும் நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் இலவச திட்டங்களை எவ்வாறு தொடர்ந்து அறிவிக்க முடியும்? இலவச உணவு, மின்சாரம், மிதிவண்டிகள், நேரடியாக பணப் பரிமாற்றம் செய்வது என மாநிலங்கள் தொடர்ந்து இலவசங்களை வழங்கினால் வளர்ச்சி எப்படி ஏற்படும்?

ஒரு திட்டம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதுகுறித்து பட்ஜெட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இதுபோன்ற சலுகைகளின் செலவு, இறுதியில் வரி செலுத்துவோர் மீதுதான் விழுகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற இலவச அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறி தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நோட்டீஸ் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.