ரேசன் அட்டை தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வரும் 13ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 13.06.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் முதலியோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.
இவ்வாறு அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.