இருபது பறவைகள் திடீரென உயிரிழந்ததால் சென்னை, கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்கா இன்று மூடப்பட்டது.
தமிழ்நாட்டு அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமான உள்ளூர், வெளியூர் மக்கள் பூங்காவுக்கு வந்துசெல்கின்றனர்.
இங்கு பல்வேறு விதமான பறவைகளும் விலங்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அடையாறு பகுதியைச் சுற்றி முன்னதாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு பரவியுள்ளது. அதை முன்னிட்டு சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர் பூங்காவில் இன்று காலையிலிருந்து கொக்குகள், நாரைகள் முதலிய 20 பறவைகள் அடுத்தடுத்து செத்து விழுந்தன.
மாதிரிகள் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து உடனடியாக பூங்காவை மூடுமாறு மேலதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் இருக்கும்போதே அனைவரையும் வெளியேறுமாறு வனத் துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
என்றாலும் பாதுகாப்பு காரணத்தை பயணிகள் கூறியதும் அதையும் ஒப்புக்கொண்டனர்.