கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
”மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தைப் படிப்படியாக முடக்குவதற்கு அரசு திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஆக உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது ஏற்கெனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பெண்களுக்குக்கூட எந்தக் காரணமுமின்றி அந்தத் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.
எனவே, பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் வழங்க வேண்டிய ரூ.1,000 உரிமைத்தொகையையாவது தொடர்ந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உரியவர்களுக்கான தொகை நிறுத்தப்பட்டிருப்பின் அதற்கான காரணத்தையும் அரசு உடனடியாக விளக்க வேண்டும்.” என்று இன்று மாலையில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் தென்னரசு கூறியுள்ளார்.