கையால் எழுதி படியெடுக்கப்பட்ட நூல் 
தமிழ் நாடு

கையால் எழுதி படி எடுக்கப்பட்ட திராவிட இயக்க நூல்கள்! கலைஞர் நூலகத்துக்கு வழங்கிய தொண்டர்!

Staff Writer

நோட்டுப்புத்தகத்தில் கையெழுத்துப் படி எடுத்து படித்த திராவிட இயக்க நூல்களை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு அளித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் மெய்கண்டார்.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு ஜூலை 15 அன்று திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக புதிய நூல்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் பலரும் தங்களிடம் இருக்கும் அரிய நூல் தொகுப்புகளை அளித்துவருகின்றனர்.

பேராசிரியர் மெய்கண்டார் தன்னிடம் இருந்த அரிய நூல்களின் தொகுப்பை கலைஞர் நூலகத்துக்கு அளிக்கையில் இந்த கையெழுத்துப் படி எடுக்கப்பட்ட நோட்டுகளை அளித்துள்ளார்.

மெய்கண்டார்

ஆரியப் புயல் ,கோவையில் கருணாநிதி, இதயபேரிகை, உணர்ச்சி மாலை ஆகிய கலைஞர் எழுதிய நூல்கள், அறிஞர் அண்ணா எழுதிய நூல்களான சூழ்நிலை, லட்சிய சீனம், சந்திரோதயம் ஆகியவை இரண்டு நீள வடிவமான நோட்டுப்புத்தகத்தில் அழகிய கையெழுத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை படியெடுக்கப்பட்ட காலத்தில் ஒரு நூலை படி யெடுக்க ரூ இரண்டு வழங்கப்பட்டிருக்கிறது. அது ஜெராக்ஸ் இயந்திரங்கள் இல்லாத காலம். அச்சு நூல்களை வைத்திருப்பவர்களிடம் இரவல் வாங்கிவந்து அவற்றை படியெடுத்து வைத்து ஓய்வாகப் படிப்பது வழக்கமாக இருந்துவந்துள்ளது.

ஓலைச்சுவடிகள் காலம் தொட்டே இலக்கிய இலக்கண நூல்களைப் படியெடுத்தல் என்பது தமிழர்களிடம் மரபாகப் பேணப்பட்டு வருகிறது. அக்காலங்களில் சுவடிகளில் படியெடுப்பவர்களுக்கு அரிசியோ நெல்லோ தானியங்களோ வழங்கப்படும். சமணர்கள் இப்படி படிஎடுக்கப்பட்ட சுவடிகளை தானமாக வழங்குவர். சாஸ்திர தானம் என அழைக்கப்படும் இச்செயல் தானத்திலேயே சிறந்த தானமாகக்கருதப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்த இந்த கையெழுத்தால் படி எடுக்கும் வழக்கத்தில் திராவிட இயக்க நூல்களும் படிஎடுத்துப் படிக்கப்பட்டன என்பது ஆச்சர்யம் தருவதாக கலைஞர் நூலகத்துக்காக இந்நூல்களைச் சேகரிக்கும் அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.