தமிழ் நாடு

ஊழலை மறைக்கவா... மின்வாரியத்தில் டிஸ்க்குகள் மாயம்!

Staff Writer

மின்சார வாரியத்தில் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில் மின்சார வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள சென்னை அலுவலகத்தில் முக்கிய தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல்போனதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  

இதுகுறித்து சென்னையில் மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனை டிஸ்க்குகள் காணாமல்போயுள்ளன என்பதைத் தெரிவிக்க முடியாது என்றார்.

போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது; விசாரணையில்தான் அது தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ஊழல் செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது; அதற்கான தரவுகளைக் கொடுத்துள்ளோம்; வேறு பல முக்கியமான தகவல்கள் அடங்கிய டிஸ்க்குகளும் காணாமல் போயிருக்கலாம்; இப்போதைக்கு பல்வேறு இடங்களில் உள்ள முக்கியமான கோப்புகளை நகல் எடுத்து வைக்கக் கூறியிருக்கிறோம் என்றும் அமைச்சர் சொன்னார்.