சென்னையில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
மழை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழக கடற்கரைக்கு அருகில் இன்று(அக். 21) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று உள்பட அடுத்த 2-3 நாள்களுக்கு (அக்டோபர் 21-23) பலத்த மழை பெய்யும்.
தமிழக கடற்கரைக்கு மிக அருகில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டெல்டா, கடலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.
இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரைக்கு அருகில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாள்களில் பரவலாக மழை பெய்ய ஆரம்பிக்கும். அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் இது இணைக்கப்பட்டுள்ளதால், உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
இந்த அக்டோபர் மாதம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் மழை பெய்யும்.
சென்னை, புறநகர் மாவட்டங்களுக்கு...
டெல்டா பகுதிக்கு அருகிலுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலே செல்வதால், தற்போது டெல்டாவில் இருக்கும் குவிவு முதலில் கடலூருக்கு மழையைத் தந்து, பின்னர் சென்னை பகுதிக்கு நல்ல மழையை தரும்.
இன்று(அக். 21) உள்பட அடுத்த இரண்டு நாள்களில் பகல் நேரத்திலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் சென்னையில் மழை அதிகரிக்கும்.
அட்சரேகைக்கு மேல் நகர்ந்தவுடன் நமக்கான மழை குறையும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.