கனமழை எச்சரிக்கை (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை!

Staff Writer

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை (நவ.17) மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சனிக்கிழமை (நவ.15) காலை இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இதன்காரணமாக, இன்று (நவ. 16) முதல் நவ. 22- ஆம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று(நவ. 16) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், காரைக்காலில் மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை(நவ. 17) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்வதற்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.