1962. பத்துமணி நேரத்தில் வரைந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயக் காட்சி சிவகுமார்
தமிழ் நாடு

மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழில் கூடுதலாக வழிபாடு- உயர்நீதிமன்றம் உத்தரவு

Staff Writer

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் தமிழையும் இணையாகப் பயன்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ரிட் மனு தாக்கல்செய்தார்.

அந்த மனு இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், ”இதுவரை சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள பல்வேறு வகையான தீர்ப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்தும்போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் எல்லா கோயில்களிலும் சமஸ்கிருதத்தை மட்டும் பயன்படுத்தி குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருவதால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கின் போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்த ஏதுவாக ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ள குடமுழுக்கு சம்பந்தமான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை கேட்டுப் பெற்று செயல்படுத்த வேண்டும். அதேபோல, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும்.” என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சங்கம் வைத்த மதுரை என்று புகழப்படும் மதுரை நகரம்; அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் சங்கப் பலகையில் திருக்குறள் வைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன; எதிர்வரும் ஜூன் மாதம் 2-ஆம் தேதிக்குள் இதுவரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ஏற்று அத்துடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கின்போது மற்ற கோயில்களைவிட அதிகமான அளவு தமிழைப் பயன்படுத்த ஏற்பாடு செய்து அது குறித்த நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்.” என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.

தமிழுக்கு இன்று இன்னும் ஒரு கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது என தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.