தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி மொழியில் உள்ள எழுத்துக்களைத் தார் பூசி அழிப்போம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
"தமிழ்நாட்டில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் எல்லை கற்கள் நடும் பணிகள், பழைய எல்லை கற்களில் வாசகங்களை புதுப்பிக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.
தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி மொழியிலும் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, தஞ்சாவூர் - சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர் பெயர்கள், தூரம் எழுதப்பட்ட போது அரசியல் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
தற்போது மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ,ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் மைல் கற்களில் இந்தி மொழியில் எழுதி டெல்லியின் மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுத்திருக்கிறது.
இந்தி ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு ஒருபோதும் அடிமைப் பத்திரம் எழுதித் தர முடியாது என்பதே 1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பின்பற்றி வரும் உறுதியான மொழிக் கொள்கை.
இந்நிலையில் ம.தி.மு.க., தஞ்சாவூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்துகிறது. நாளை ம.தி.மு.க. நிர்வாகிகள் தஞ்சை - சேலம் தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச்-136இல் உள்ள மைல் கற்களில் எழுதப்பட்டிருக்கும் இந்தி வாசகங்களை தார் பூசி அழிக்கும் பணியை மேற்கொள்வார்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இதே நிலைப்பாடு தொடர்ந்தால் நவம்பர் 29 ஆம் நாளுக்கு பிறகு எனது தலைமையில் மைல் கற்களில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டம் தொடரும்." என்று வைகோ கூறியுள்ளார்.