டெங்கு பாதிப்பு  
தமிழ் நாடு

உஷார்... டெங்கு பாதிப்பு வராமல் காத்துக்கொள்வது எப்படி?

Staff Writer

பொதுவாக மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல், தற்போது பல இடங்களில் பெரிய அளவில் மழை இல்லாதபோதும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மழை இல்லாத காலங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் சேமித்து வைத்திருக்கும் குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவற்றைத் திறந்துவைத்திருந்தால், அதில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட வாய்ப்புள்ளது.

ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாக அதிக தண்ணீர் தேலையில்லை. தண்ணீர் தேங்கியிருக்கும் பாத்திரத்தில் தண்ணீரின் மட்டத்திற்கு சற்று மேலே முட்டையிடும் இந்த பெண் ஏடிஸ் கொசுக்கள், அந்தப் பாத்திரத்தில் தண்ணீர் வற்றிவிட்டாலும் வறண்ட நிலையிலேயே பல மாதங்கள் உயிருடன் இருக்கும் தன்மையுடையவை.

பாத்திரங்களைச் சரியாகக் கழுவாமல், மீண்டும் அதில் தண்ணீரை நிரப்பும்போது முதலில் புழுக்களாக மாறி, பின்னர் வளர்ந்து கொசுக்களாக உருவாகின்றன.

எனவே, தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் குடங்கள், பாத்திரங்கள், வாளிகள், தண்ணீர்த் தொட்டிகள் ஆகியவற்றை எப்பொழுதும் மூடி வைக்க வேண்டும் என்றும் தண்ணீர் காலியானதும் அவற்றைச் சுத்தமாக தேய்த்துக் கழுவ வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், திடீரென அதிக காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தசை - மூட்டு வலி, வாந்தி, வயிற்றுவலி, மூக்கு அல்லது ஈறுகளில் ரத்தம் வடிதல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram