தமிழக அரசு பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடுவதைத் தடுக்க மனித வளம், கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாட்டில் உள்ள 14,829 அரசு தொடக்கப் பள்ளிகளில் 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் தான் பயில்வதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.
மொத்தமுள்ள 24,349 அரசு தொடக்கப்பள்ளிகளில், 14,829 பள்ளிகளில், அதாவது 60.90% பள்ளிகளில் மொத்தமுள்ள 5 வகுப்புகளிலும் சேர்த்து 30-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர்.
அதிலும், 6,635 பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களும், 3,027 பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்களும்தான் பயின்று வருகின்றனர்.
20 முதல் 30 மாணவர்கள்வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,167 ஆகும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வேகத்தில் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
30-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 15 ஆயிரம் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வட மாவட்டங்களில்தான் உள்ளன.
குறிப்பாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், திருவள்ளூர் ஆகிய 5 வட மாவட்டங்களில் 30-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 3,062 அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 20.65% என்பது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும், அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள்கூட ஏற்படுத்தப்படாததும்தான் இதற்குக் காரணம்.
5 வகுப்புகளைக் கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், அவர்களால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எவ்வாறு பாடம் நடத்த முடியும்? அவ்வாறு பாடமே நடத்தப்படாத பள்ளிகளில் தங்களின் குழந்தைகள் பயில்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள் ஆகிய வினாக்களுக்கு விடைகளைக் கண்டறிந்தாலே அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சிக்குத் தீர்வு காண முடியும்.
இதே வீழ்ச்சி நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
அதைத் தடுக்கவேண்டும் என்றால், அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை உடனடியாக 50 சதவீதமும், அடுத்த மூன்றாண்டுகளில் 100 சதவீதமும் உயர்த்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கு புத்துயிரூட்டுவதை ஒரு சிறப்பு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.