திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட குன்னம் ராமச்சந்திரன் அரசியலிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
பெரம்பலூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கண்ணீர் மல்கக் கூறியதாவது:“இரண்டு விஷயங்கள் என் மனதை வாட்டியது. என்னைப் பெற்றெடுத்த தாய் புரட்சித் தலைவி அம்மாவின் படத்தை வீட்டிலிருந்து, அலுவலகத்திலிருந்து அகற்றுவாயா என்று குடும்பத்தினர் கேட்டனர். எனக்கு அசிங்கமாக இருக்கிறது. ‘இது வெல்லாம் ஒரு வேலையா அப்பா?’ என்று என் மகள் கேட்டாள். இது மிகுந்த வேதனை தந்தது.
இரவு முழுவதும் உறங்க முடியவில்லை. காலையில் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு தெளிவான முடிவை எடுத்துள்ளேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதாக எடுத்த முடிவுக்கு எனது குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் உடல் நலன் குறித்து மருத்துவர்களின் ஆலோசனை காரணமாக, நான் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுகிறேன்.
நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு பேசுவது தவறான விஷயம் என்ற போதிலும், உடல் நிலை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல் பேரில் நான் இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை.
என்னுடன் இதுவரை பயணித்த கழகத் தொண்டர்களும் என்னை மன்னித்து, அவர் அவர் விரும்பும் கழகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் நேற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
திமுகவில் இணைவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாததால், அரசியலிலிருந்து விலகுவதாக இன்று அவர் கூறியிருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், குன்னம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர்.
ஏற்கனவே, ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்தார். விரைவில் குன்னம் ராமச்சந்திரன் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.