முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  
தமிழ் நாடு

“உ.பி.யுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவதில் உடன்பாடில்லை” - ப. சிதம்பரம்!

Staff Writer

“இந்தியாவிலேயே தமிழகம்தான் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது என மத்திய அரசின் நிதி ஆயோக் தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால், பிரவீன் சக்ரவர்த்தி உத்தரப் பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை” என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் கூறியது: “பிப்ரவரி மாதமே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கலாம். நல்ல தேர்தல் அனுபவம் உள்ள இண்டியா கூட்டணியே வெல்லும். ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி குறித்து திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

இந்தியா கூட்டணி மேலும் வலுவடையும். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என திமுக தலைமை மற்றும் காங்கிரஸ் தலைமை இணைந்து முடிவு செய்யும்.

இந்தியாவிலேயே தமிழகம் தான் வளர்ச்சியில் முதலிடம் என மத்திய அரசின் நிதி ஆயோக் தெளிவாக குறிப்பிடுகிறது. ஆனால், பிரவீன் சக்கரவர்த்தி உத்தரப் பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதை வெளியே சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மெத்த படித்தவர்களுடன் நான் பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியது மிகப் பெரிய இமாலயப் பிழை. இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. பெரியார் ஏற்படுத்தியது சரித்திரப் புரட்சி. இதை காலத்தால் அழிக்க முடியாது.

விஜய் முயற்சி வெல்லாது. இந்தியா கூட்டணிதான் வெல்லும் என முழு நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி என்பது குறித்து மற்றவர்கள் தங்களது கருத்தை சொல்லலாம். ஆனால், தலைமை தான் முடிவு செய்யும். தனிமனிதனின் பேச்சு வேறு, கட்சியின் முடிவு வேறு. இது சர்வாதிகார நாடு கிடையாது” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வு பிரிவு தலைவரும், ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து தெரிவித்திருந்தார். இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.