அமைச்சர் பொன்முடி 
தமிழ் நாடு

சேறு வீசிய விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை! – அமைச்சர் பொன்முடி விளக்கம்

Staff Writer

‘சேறு வீசிய விவகாரத்தை பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை’ என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு அருகே மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று அமைச்சர் பொன்முடி சென்றபோது அவர் மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து கூறியதாவது:

"யார் சேறு அடித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். சேற்றை வாரி இறைக்க நமது ஆட்கள் விட்டுவிடுவார்களா? நாங்கள் காரை விட்டு இறங்கவில்லை என தொலைக்காட்சியில் பேசுகிறார்கள். காரை விட்டு இறங்கி அரை மணி நேரம் ஊருக்குள் போய் பேசிவிட்டு வந்தோம். எங்கள் பின்னால் இருந்து சேற்றை அள்ளி வீசியிருக்கிறார்கள். அதன் பிறகு நான் எனது தொகுதி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தேன். எந்த பணிக்கும் தடை ஏற்படவில்லை.

சிலர் அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறு செய்கிறார்கள். அதை பெரிதுபடுத்தி நாங்களும் இதை அரசியலாக்க விரும்பவில்லை. வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதுதான் எங்கள் நோக்கமே தவிர, அரசியல் செய்யும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்ல வேண்டிய இடத்தில் சொன்னால் நன்றாக இருக்கும்." இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.