‘நாம் ஆண்ட பரம்பரை’ என அமைச்சர் மூர்த்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ‘தான் அப்படி நேற்று பேசவே இல்லை’ என்று அவர் இன்று விளக்கமளித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில், “நாமெல்லாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்; நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சுதந்திரப் போராட்டத்தில் முன்நின்றனர். படிப்பறிவில் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது; தற்போது அந்த நிலை மாறிவருகிறது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பெரும் எதிர்ப்பை பெற்றது.
இந்தநிலையில், ’நான் அப்படி பேசவே இல்லை’ என்று அமைச்சர் மூர்த்தி இன்று விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள அவர், “தயவுசெய்து அந்த வீடியோவை முழுவதுமாக பார்க்கவும். தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள். எல்லோருக்கும் பொதுவான ஒருவன் நான்.
படித்து, தேர்ச்சி பெற்று பதவி என்னும் அங்கீகாரத்துக்கு வரும்போது, எல்லா சமூக மனிதர்களையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதைதான் நான் அந்த வீடியோவில் கூறியிருக்கிறேன். ராஜராஜசோழன் காலத்தில் இருந்ததையே ஆண்ட பரம்பரை என்று கூறுகிறேன். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னர் பேசியதை எடிட் செய்து திட்டமிட்டுப் பரப்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.