தவெக தலைவர் விஜய் 
தமிழ் நாடு

“ஒரு துளி ஊழல் கூட படியவிடமாட்டேன்...” - விஜய்

Staff Writer

எழுதி வைத்து கொள்ளுங்கள். இதுக்கு முன்னாடி இருந்தவர்கள் மாதிரியோ, இல்லை இப்பொழுது இருக்கிறவர்கள் மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசா தொட மாட்டேன். அது எனக்கு அவசியம் இல்லை. ஒரு துளி ஊழல் கறை படியாது, படியவும் விட மாட்டான்.” என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் "ஒருதுளி ஊழல்கூட படியவே படியாது, படியவும் விடமாட்டேன்" என பேசினார்.

தவெகவுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில், அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்ட த்தில் விஜய் பேசியதாவது: "நம்முடைய இந்த அரசியல் பயணத்தில் மிக மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம். நான் ஏன் இதை அழுத்தமாக சொல்கிறேன் என்றால், ஏதோ அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களோ... அழுத்தமா, நமக்கா? அழுத்தத்திற்கு எல்லாம் அடங்கி போற ஆளா இந்த ஆளு? இந்த முகத்தை பார்த்தால் அப்படியா உங்களுக்கு தெரியுது. அதனால் அப்படி எல்லாம் நடக்காது. நம்மகிட்ட அது எல்லாம் நடக்காது. ஆனால் அழுத்தம் இருக்கிறதா என்று கேட்டீங்கனா அழுத்தம் இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. அது நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது.

தமிழகத்தை இதுக்கு முன்னாடி ஆண்டவர்கள் பாஜவுக்கு அடிமையாக தான் இருக்கிறார்கள். அவர்களை நம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. இப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக ஏதாவது செய்வார்களா என்று பார்த்தால், இவர்களும் அவர்களை மாதிரி தான். இன்னும் சொல்ல போனால் ஒரு படி மேலே, இன்னும் மோசம். அவர்கள் நேரடியாக சரண்டர் ஆகி இருப்பார்கள், இவர்கள் மறைமுகமாக சரண்டர் ஆகி இருக்கிறார்கள். அவ்வளவு வித்தியாசம். அதனால் அவர்களின் வேஷம் கலைந்து விடமால் இருக்க, கலர் கலராக, கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எல்லாம் வெளியிடுகிறார்கள். இதை கவனித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லாமே இப்படியே இருக்கிறார்களே, நமக்காக யாராவது உண்மையாக உழைக்க யாராவது வந்து விட மாட்டார்களா என்று மக்கள் ஒருவிதமான வெளியே சொல்ல முடியாத அழுத்தத்தில் இருக்கிற நேரம் இது.மாத்தி மாத்தி ஓட்டு போட்ட அவர்கள், இப்பொழுது நம்மை நம்புகிறார்கள். தமிழக வெற்றிக்கழத்தை, இந்த விஜய் கூட நிற்பான் என்று நம்புகிறார்கள். நம்மை நம்புகிறவர்களுக்காக நாம் நம்பிக்கை உடன் இருக்க வேண்டும். அப்படி என்றால் இது மிக மிக முக்கியமான கால கட்டம் தானே? அதனால் தான் அவ்வளவு அழுத்தமாக சொன்னேன்.

இந்த தேர்தல், இந்த கூட்டணி இது எல்லாம் பற்றி ஜோசியங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. மக்கள் நமக்கு என்று ஒரு இடத்தை கொடுத்து இருக்கிறார்கள். அதை இந்த நாடே பார்த்து கொண்டு இருக்கிறது. உள்ளன்புடன் நம்மளை அரவணைத்து கொண்டு இருக்கிறார்கள். உழைப்பது பழக்கமாகி, இப்பொழுது எனது ஒரிஜினல் கேரக்டராக மாறிவிட்டது. இத்தனை வருசமாக இருக்கிற அந்த குணம் எப்படி மாறும்? அரசியலுக்கு வந்த பிறகு சரி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகும் சரி, ஒன்று சொல்கிறேன். எழுதி வைத்து கொள்ளுங்கள். இதுக்கு முன்னாடி இருந்தவர்கள் மாதிரியோ, இல்லை இப்பொழுது இருக்கிறவர்கள் மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசா தொட மாட்டேன். அது எனக்கு அவசியம் இல்லை. ஒரு துளி ஊழல் கறை படியாது, படியவும் விட மாட்டான் விஜய். நீங்கள் இது என்ன சினிமா? இது என்ன முதல்வன் படமா இவர் வந்து ஒரே நாளில் கிளீன் பண்ணிவிடுவான் என்று கேட்கலாம். அது சாத்தியம் இல்லை. அதை அகற்ற நடவடிக்கை எடுப்பேன். தீய சக்தி, ஊழல் சக்தி ஆகிய இரண்டு பேரும் தமிழகத்தை ஆளவே கூடாது. அக்கட்சிகளை எதிர்க்கும் சக்தி நம்ம கிட்ட மட்டும் தான் இருக்கிறது. அடங்கி போகிறதுக்கோ, அண்டி பிழைக்கிறதுக்கோ, அடிமையாக இருக்கிறதுக்கோ அரசிலுக்கு வரவில்லை. மக்களை பாதுகாக்க மட்டும் தான் அரசியலுக்கு வந்துள்ளோம். நட்பு சக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும், தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம். இவ்வாறு விஜய் பேசினார்.