அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வருகின்ற 5 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
சில மாதம் முன்பாக அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், அதிமுக கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் செங்கோட்டையனுக்கு வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
சமீபத்தில் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், கோபி செட்டிபாளையம் வழியாக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அந்த பேரணியில் செங்கோட்டையனும் கலந்துகொள்ளவில்லை.
இதையடுத்து கோபி செட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ”வருகின்ற 5 ஆம் தேதி கோபி செட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் மனம் திறந்து பேசவுள்ளேன். எனது முடிவை அறிவிக்கவுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவராக இருக்கும் செங்கோட்டையன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.