நடிகர் அஜித்தை இறக்கினால் இதைவிட இன்னும் கூட்டம் வரும் என்று தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதில் அளித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை விஜய் நேற்று தொடங்கினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்துகிறார்.
அதன்படி, நேற்று விஜய் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அவரை பார்ப்பதற்காக ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் திரண்டு நின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவரது பிரசார வாகனம் வந்ததால் திருச்சி நகரமே குலுங்கியது.
இந்நிலையில் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது விஜய் பரப்புரை குறித்த கேள்விக்கு பதில் அளித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
“திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும். ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் விஜய்க்கு வரும் கூட்டத்தைவிட அதிக கூட்டம் வரும்.
இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் வந்த நிலை நமக்கு வராது என்று யாராவது உறுதி தர முடியுமா? .. பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று படுக்க போனால் விழுகிறது உங்கள் சாம்பல் ஆக தான் இருக்கும். தன் வீட்டு கூரை எரியாத வரை நீங்கள் தண்ணீர் எடுத்து வர தயாராக இல்லை. பக்கத்து வீட்டு கூரை தான் எரிகிறது என்று ஆனந்தத்தில் தூங்க போகிறீர்கள். பார்க்க நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்கள் சாம்பல் தான் இருக்கும். எச்சரிக்கையாக இருங்கள். இப்பொழுது நான் பேசுகிறது வேடிக்கையாக தான் இருக்கும்.
நீங்கள் மலையை வெட்டி, கல்லாக்கி உங்கள் பிள்ளைக்கு பெரிய வீட்டை கட்டி வைத்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் இந்த நாட்டை எனது பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் காசு சேர்த்து வைத்துவிட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நான் சுவாசிக்க நல்ல காற்றை சேர்த்து வைத்து விட்டு சாக வேண்டும் என்று நினைக்கிறேன.” இவ்வாறு அவர் கூறினார்.