மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சர்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: “எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான்.
திமுக மாவட்டச் செயலாளர் தளபதியின் பேச்சு வருத்தம் அளிக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டார். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எல்லா மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும்பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை சாதாரணமாக நினைத்துக் கொண்டு பேசுவதை கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியாது. கருத்தெல்லாம் சொல்வோம். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம். மரியாதை கொடுத்தால் மரியாதை கொடுப்போம்.
திமுகாவால் தான் நான் எம்.பி . ஆனேன் என சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் மீண்டும் எம்.பி.யாக விருதுநகரில் நிற்கப்போவதில்லை. என்னைப் பொறுத்தவரை கட்சிதான் முக்கியம். என்னை பொறுத்தவரை எம்.பி . மண்ணாங்கட்டியெல்லாம் ஒரு மயிறும் கிடையாது.
காங்கிரஸ் கட்சிதான் என் உயிரே தவிர எம்.பி., எம்.எல்.ஏ. மண்ணாங்கட்டி எல்லாம் ஒன்றும் கிடையாது.
சாகும் வரை காங்கிரஸ்காரனாகத்தான் இருப்பேன். நம்முடைய போராட்டம் காங்கிரஸ்காரர்களின் மரியாதைக்கான போராட்டம். நாங்கள் வேறு எதையும் கேட்கவில்லை. காங்கிரஸ்காரன் அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைப்படமாட்டான்.
தி.மு.க.வின் பேச்சுவார்த்தைக்கு 70 நாளாக காத்திருக்கிறோம். தோழமைக்கு மரியாதை கொடுக்கிறோம். அதை எதிர்பார்க்கிறோம். சொத்து சுகம் கேட்கவில்லை, நான் கேட்பது மரியாதை மட்டும்தான். காங்கிரஸ் குறித்த தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சு வேதனை அளிக்கிறது
உண்மையாக பா.ஜ.க.வை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரசாருக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடி அரசு ராகுல்காந்தியை பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். நாடாளுமன்றத்தில் யார் பலமாக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது." என்றார்