தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைக் கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று, ஒதுக்கீடுதாரர்கள் செலுத்தத் தவறிய நிலுவைத் தொகைக்கான வட்டியைத் தள்ளுபடி செய்திடும் ஆணையை முதலமைச்சர் விஜய் பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைமுறைத் திட்டத்தின் கீழ் மனை, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று தவணைக் காலம் முடிவுற்ற பின்பும் விற்பனைப் பத்திரம் பெறாமல் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் உள்ளனர்.
இவர்கள் முழுத்தொகையையும் செலுத்தாமல் விற்பனைப் பத்திரம் பெறமுடியாமல் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைக் கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்தத் தவறிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில், அத்தொகையினை ஒரே தவணையாகச் செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டித் தள்ளுபடியும், வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டித் தள்ளுபடியும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்குண்டான வட்டித் தள்ளுபடியும் செய்து விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் ஓராண்டு காலத்திற்கு சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின்மூலம், சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால், வாரியத்திற்கு சுமார் 92.39 கோடி ரூபாய் வருவாய் ஏற்படுவதுடன், இச்சிறப்பு வட்டி சலுகையின் மூலம் ஒதுக்கீட்டாளர்களுக்கு 18.45 கோடி ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படும்." என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.