தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
''வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.
தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!
உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.