மாணிக்கம் தாகூர் எம்.பி.  
தமிழ் நாடு

ஐஓபி- சென்ட்ரல் பேங்க் இணைப்பா?- மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

Staff Writer

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றைத் தனியார்மயமாக்க மோடி அரசு முடிவெடுத்திருப்பதைத் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாகச் சாடியுள்ளார்.  

”ஒழுங்குமுறை பொது பங்குதாரர் வரம்புகளை பூர்த்தி செய்வதாகக் கூறி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் நிறுவனர்களின் பங்குகளை 75 சதவிகிதமாக குறைக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளது. இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளை நிதி ஆயோக் எடுத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை 27 இல் இருந்து 12 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் பங்குகளை 51 சதவீதத்திற்குக் கீழே கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது இப்போது நடைமுறைக்கு வரப்போகிறது.

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் 60.72 பங்குகளை கனடா நாட்டைச் சேர்ந்த அன்னிய நிறுவனத்திற்கு தாரை வார்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்குகிற முயற்சி நடைபெறுகிறது.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தற்போது இந்திய அரசின் பங்கு 81.19 சதவிகிதம், யுனைடெட் கமர்ஷியல் வங்கியில் 90.95 சதவிகிதம், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 93.85 சதவிகிதம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 92.44 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து தற்போது 75 சதவிகிதமாக குறைக்கப்பட்டு, காலப் போக்கில் 51 சதவிகிதத்திற்கும் குறைவாக பங்குகளை விற்பனை செய்து, தனியாருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கதவுகளை திறந்துவிட பிரதமர் மோடி அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைவிட அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

1969 இல் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது, ரூபாய் 50 கோடிக்கும் மேலான வைப்புத் தொகைகளை வைத்திருந்த 14 வங்கிகளை அவசரச் சட்டத்தின் மூலமாக 19 ஜூலை 1969 இல் தேசியமயமாக்கினார். ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அவசரச் சட்டம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பு வழங்கியது.

மேலும், மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்தையும் செல்லாது என்று அறிவித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடாளுமன்ற உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியதோடு, நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்களின் ஆதரவு தேவை என்று 1971 இல் பொதுத் தேர்தலை அறிவித்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

தேர்தலில் அமோக ஆதரவு பெற்று மக்களவையில் 350 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் 25, 26-வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து வங்கிகளை தேசியமயமாக்கியதோடு, மன்னர் மானியத்தையும் ஒழித்தார்.

வங்கிகளைத் தேசியமயமாக்கியதன் நோக்கம் பொதுத்துறை வங்கிகள் என்பது நகரங்களில் வாழ்கிற மக்களுக்கும், கார்ப்பரேட்டுகளின் தேவைகளையும் நிறைவு செய்கிறதே தவிர, ஏழை,எளிய கிராமப்புற, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

அந்த நடவடிக்கையின் விளைவாக, 1969 இல் 9,000 கிளைகளைக் கொண்டிருந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 2025 இல் 1.3 லட்சமாக உயர்ந்தது. அதேபோல, விவசாயிகளின் கடன் 2 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்ந்து தற்போது ரூபாய் 234 லட்சம் கோடி 2024-25 இல் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் கடன் பெற்று, தொழில் செய்து பயனடைந்தனர்.

1969 இல் 65,000 மக்களுக்கு ஒரு வங்கி என்ற நிலையிலிருந்து 2025 இல் 9,000 பேருக்கு ஒரு வங்கி என்று வங்கிகளின் கிளைகள் விரிவுடுத்தப்பட்டன. இதன்மூலம் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கையும், சேமிக்கிற பழக்கமும் வளர்ந்து வந்தது. வங்கிகள் மீது நாட்டு மக்களுக்கு இருந்த தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்து கிராமப்புற விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பங்காற்றியது.

அன்னை இந்திரா காந்தி எடுத்த புரட்சிகர நடவடிக்கைகளினால் ஏழை, எளிய மக்கள் பெற்ற பயன்களை பறிக்கின்ற வகையில் பிரதமர் மோடி அரசின் நிதி ஆயோக் நிறுவனம் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.” என்று மாணிக்கம் தாகூரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.