விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பம்பை ஆற்றங்கரையில் இரும்பு காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி, பானைத் துண்டுகள், கண்ணாடி மணிகள், உறை கிணறுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விக்கிரவாண்டி பம்பை ஆற்றங்கரையில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டனர். அதில், இரும்பு காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், உறை கிணறுகள் போன்ற முக்கிய பொருட்கள் கிடைத்துள்ளன. இதனால் அப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பம்பை ஆற்றின் கரையில் தொல்பொருள் ஆராய்ச்சி மேகொள்ளப்படும் என கடந்த ஜனவரி மாதம் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தொல்லியல் துறையால் இந்த களப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பி. கரைமேடு, செங்காடு, குரும்பன் கோட்டை, பொய்யாப்பாக்கம், வி.புதூர், திருவாமாத்தூர், அய்யன்கோவில்பட்டு, ஓராத்தூர் உட்பட 14 இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில், பி. கரைமேடு பகுதியில் கறுப்பு, சிவப்பு பானையோடுகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், செங்காட்டில் 4 முதுமக்கள் தாழிகள், உடைந்த மெருகூட்டப்பட்ட கற்கோடாரிகளும், பொய்யப்பாக்கத்தில் பண்டைய கால உறை கிணறுகள் சேமிப்பு ஜாடிகள் கிடைத்துள்ளன.
அய்யன்கோயில்பட்டியில் வண்ணமயமான கண்ணாடி மணிகள், அலங்கரிக்கப்பட்ட மண் பாண்டகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் இரும்பு காலத்தைச் சேர்ந்தவை என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பம்பை ஆற்றங்கரையில் விரிவான அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டால் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த பல விஷயங்கள் தெரிய வரும் என கூறப்படுகிறது.