மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

பிளாக்மெயில் செய்வதுதான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?- மு.க.ஸ்டாலின் காட்டம்

Staff Writer

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை தெற்கு பா.ஜ.க. வேட்பாளர் இராம. சீனிவாசனின் மனுத்தாக்கலுடன் உடன்வந்த மகாராஷ்டிர முதலமைச்சர் பட்னாவிஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்வினை ஆற்றியுள்ளார்.  

”அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்.” என்று மு.க.ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.