பிரேமலதா விஜயகாந்த் 
தமிழ் நாடு

என்டிஏ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக…?- பிரேமலதா பதில்!

Staff Writer

பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்று கூட எங்களுக்கு தெரியாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் களைகட்டியுள்ளன. வரும் தேர்தலில் அதிமுக -பாஜக இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உருவாகியுள்ள நிலையில், அன்புமணி தரப்பு பாமக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதனால், தேமுதிகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில்,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை தேமுதிகவிற்கு அழைப்பு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்று கூட எங்களுக்கு தெரியாது. கூட்டணிக்கு வருமாறு யாரும் தற்போது வரை எங்களை அணுகவில்லை. என்றார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் இணைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.