திமுக தீய சக்தியா…? தூய சக்தியா..? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுகவில் இணைந்ததற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா ஆரம்பித்த, என்னுடைய தாய் கழகமான திமுகவில் மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து அரசியல் பண்பாடு உடன் ஆட்சியையும், கட்சியையும் ஸ்டாலின் வழிநடத்துவதை உணர்ந்து திமுகவில் இணைந்துள்ளேன். அரசியலில் இன்று சர்வாதிகாரியாக, ஆணவப் போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி இனி வெற்றி பெற முடியாது. இந்த சூழலை அதிமுகவில் அவர் உருவாக்கியிருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லட்சகணக்கான அதிமுக தொண்டர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாடு திமுக தலைவர் ஸ்டாலினை உற்று நோக்குகிறது. அரசியல் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்துடன் ஸ்டாலின் கட்சியை நடத்துகிறார். அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். நல்லாட்சி, சிறந்த ஆட்சி, சீர்மிகு ஆட்சியை ஸ்டாலின் கொடுத்து வருவதை நாடு கவனித்து வருகிறது. தமிழக பெண்களுக்கான உதவிகளை செய்து வருகிறார். சட்டமன்ற வரலாற்றில் அண்ணா எப்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் எப்படி சம வாய்ப்பு கொடுத்தாரோ, ஸ்டாலினும் அதேபோல செயல்பட்டு வருகிறார்.
திராவிட நூற்றாண்டில் அதை அழிப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்தி திராவிட இயக்கத்தை கட்டி காப்பதில், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று திராவிட சிந்தாத்தை காப்பதில் முன்னணியில் இருக்கிறார் ஸ்டாலின். அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார். தென் மாவட்டங்களிலிருந்து எந்த ஒரு தலைவரும் வர கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருந்து, அங்கிருப்பவர்களை அழிக்க முனைப்பு காட்டுகிறார்.
நான் முதல்வராக பொறுப்பேற்றிருந்தபோது, கருணாநிதி என்னை ‘பச்சை தமிழர் பன்னீர்செல்வம்’ என பாராட்டினார். திராவிட இயக்கத்தையும், கொள்கையையும் காக்க திமுகவே தலைசிறந்த இயக்கம். திமுகவில் நான் ஒரு தொண்டனாக இணைந்திருக்கிறேன். திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இது நான் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு. அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கு அதிமுகவில் இல்லை. அது மறைந்துவிட்டது.
திமுக தீய சக்தி என்று நான் என்றைக்குமே சொன்னது கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக போட்டியிடுவேன். மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு என்றும் ஆதரவு கொடுப்பேன். கட்டுப்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை.” என்றார்.